’மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரபீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் அவர்கள் கன்னடத்தில் எழுதி தமிழில் ’மண்ணும் மனிதரும் ‘ என்ற தலைப்பில்  தி.ப. சித்தலிங்கையாவால்    மொழி பெயர்க்கபட்ட நாவலில்  மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களை வாழ்நாளெல்லாம் ஊர்விட்டு ஊர் அலைக்கழித்த சூழலையும் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

1840 தொடங்கி 1940 வரை வாழ்ந்த ஒரு குடும்பத்தையும் அக்குடும்பத்தின் உறவுகளை சுற்றத்தை நட்பை தொடரும் இருதலைமுறைகளை சொல்லுகிறது ’மீண்டும் மண்ணுக்கே’ என்னும் பொருள்படும் தலைப்பில் கன்னடத்தில் எழுதப்பட்ட இந்நாவல்

மிக விரிவான தளத்தில் எழுதபட்டிருக்கும் இந்நாவலின் கதை புரோகிதம் செய்துவாழும் அந்தணரான ஐதாளரின் குடும்பத்தை மையமாக கொண்டிருக்கிறது.  ஐதாளரின் தந்தை சிக்கனம் கருதி நல்ல பெருமழை பெய்யும் காலத்தில் ஐதாளருக்கு  செய்து வைக்கும் கல்யாணத்தில் நாவல் துவங்கி ஐதாளரின் பேரன் ராமனின் கல்யாணத்தில் முடிகின்றது

கழிமுகத்தில் ஒரு சிறு வீட்டைத்தவிர வேறெந்த சொத்துக்களும் இல்லாத புரோகிதம் செய்யப்போகும் இடத்திலேயே அன்றைய உணவை முடித்துக்கொள்ளும்  ஐதாளரும்  கடும் உழைப்பாளியான குழந்தைகள் இல்லா அவரது மனைவி பார்வதியும் சிறுவயதிலேயே கணவரை இழந்து குறைபட்டுபோன ஐதாளரின் சகோதரி சரஸ்வதியுமே  முதல் தலைமுறை மாந்தர்களாக  துவக்கத்தில் வருகின்றனர்.

ஐதாளர் குழந்தையின்பொருட்டு செய்துகொள்ளும் இரண்டாம் திருமணம் அதில் பிறந்து செல்லம் கொடுக்கப்பட்டு திசைமாறிப்போன லச்சன் அவன் மனைவி நாகவேணி ஆகியோர் இரண்டாம் தலைமுறை

கழிமுக வீட்டை விட்டு பெருநகரத்துக்கு  கல்வியின் பொருட்டு இடம்பெயரும் அவர்களின் மகன் ராமன்   மூன்றாம் தலைமுறை  என நீளும் கதையில் 18   மற்றும் 19  ஆம் நூற்றாண்டின் காலச்சூழலை மிக நன்றாக அவதானிக்க முடிகின்றது.

பல்வேறுபட்ட குணச்சித்திரங்கள் உள்ள பாத்திரங்களின் வாயிலாக அன்றைய மாந்தர்களுக்கு மண்ணின் மீதான பெருவிருப்பு இருந்ததையும் பெண்களின் அயராத உழைப்பால் குடும்பங்கள் தலை நிமிர்வதையும் தெளிவாக காணமுடிகின்றது

ஐதாளரின் திருமணத்திற்கு வர துணியாலான குடைபிடிப்பவர்களே ஊரின் பெருந்தனக்காரர்களென்னும் வரியிலிருந்தே அக்காலத்தின் பொருளாதார நிலையை அறிந்துகொள்ளலாம்.

ஏழை அந்தணர் வீடுகளில் உணவுப்பழக்கம் எப்படியென்பதையும் மிக சாதரணமாக சொல்லிச்செல்கிறார் கதாசிரியர் கணவர் புரோகிதம் பண்ணப்போகும் வீட்டில் சாப்பிடுவதால் பெண்களிருவரும் அவடக்கீரை தாளித்தோ அல்லது உருளைகிழங்கோ வெள்ளரிக்காய்களோ இருக்கும் மிக எளிய உணவை ஒரு பொழுது உண்டுவிட்டு இரவில் பிடி அவலை நனைத்து சாப்பிட்டுவிட்டு படுக்கின்றனர்.   கடும் உழைப்புக்கு சற்றும் பொருந்தாத ஏழ்மை.  மாவடு தேடி நல்ல வெய்யிலில் பலகிலோமீட்டர் தூரம் நடந்து கிடைத்த மாங்காய்களை  ஊறுகாய் போடுவதும் சித்தரிக்கபட்டிருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சூரனே சொல்லுவதுபோல ’பிராமணர்களுக்கு எதற்கு குறைவென்றாலும் நாக்குக்கு மட்டும் அப்படி  வேண்டியிருக்கிறது’

பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளை நினைக்கவும் முடியாது இக்காலத்துப்பெண்களால் வீட்டைப்பெருக்குவது பற்றுப்பாத்திரங்களை தேய்ப்பது கால்நடைகளுக்கு நீரும் தீவனமும் வைப்பது வயலில் வேலை செய்வது வண்டல் மண்ணை அரித்து சட்டி சட்டியாக கொண்டு வந்து சேர்ப்பது நீர்பாய்ச்ச ஏற்றமும்  கபிலையும்  இறைப்பது தினப்படி  வீட்டை மெழுகுவது தோட்டத்தில் விதைப்பது நாற்று நடுவது அறுப்பது புன்னைக்காய்களை சேகரித்து எண்ணை எடுப்பது பால் கறப்பது கடல் நீரைகாய்ச்சி வீட்டு சமையலுக்கு தேவையான  உப்பெடுப்பது வெள்ளத்தில் அடித்து வரும் மரக்கட்டைகளை உயிரைப் பணயம் வைத்து விறகுக்கென சேர்ப்பதென்று முடிவில்லாமல் நீள்கிறது இவர்களின் உழைப்பின் பட்டியல். அசாத்தியமான உடல்வலிமையுடன் மனவலிமையும் உள்ளவர்களாயிருந்திருக்கிறார்கள் அப்போதைய பெண்கள். வெயிலும் மழையும் வெள்ளமுமாய் ஓயாமல் வாழ்வை அலைக்கழித்தாலும் பெண்கள் யாவரும் மூன்று தலைமுறைகளிலுமே புரிதலும் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் விசாலமனதும் உளளவர்களாகவே இருக்கிறார்கள்

கணவர் எந்நேரம் வீடுதிரும்பினாலும் எந்த கேள்வியும் கேட்காமலிருப்பது புத்திரபாக்கியத்துக்கென மறுதிருமணம் செய்யும் போதும் எதிர்ப்பின்றி அதை ஏற்றுக்கொள்வது அத்திருமணத்திற்கென்று அப்பளம் இடத்துவங்குவதென்று பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்த வேதனைகளையும் அவர்களுக்கு நடந்துகொண்டிருந்த அநீதிகளையும் அப்போதைய வாழ்வின் இயங்குமுறைககளாகவே சொல்லிச்செல்கிறது இந்நாவல்

அப்போது வழக்கத்திலிருந்த குறுநிலங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்த  பெரிய முதலீடுகள்  இல்லாத விவசாய முறைகளையும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த முடி மணங்கு சேர் கோர்ஜி என்னும் அளவை முறைகளும் கதையில் பல இடங்களில் சொல்லப்படுகின்றன.

எத்தனை ஏழ்மையிலிருப்பினும் அந்தணர்களான அவர்களுக்கு கீழிருக்கும் தாழ்த்தபட்டவர்களோடு இணைந்தே விவசாயம் நடந்திருக்கிறதென்பதும் ஐதாளரின் குடும்பத்திற்கு சூரனும் பச்சியும் செய்யும்  பிரதிபலன் எதிர்பாராத தொடர் உதவிகளிலிருந்து புலனாகின்றது,

இறந்த மாட்டின் சவத்தை பறையர்கள் வந்து எடுத்துச்செல்லும் வழக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

கழிமுகத்தில் அமைந்திருக்கும் ’’கோடி’’ கிராமமே கதைக்களமென்பதால் அப்பொழுது படகுகளுக்கு மஞ்சி என்னும் பெயரிருந்ததும் பாய்மரப்படகில் ஒரு வகை பத்தொமாரி என்பதும் கோடா என்பது மிகபெரிய பாய்மரப்படகென்பதும் ஐதாளரின் பார்வையில் துறைமுகப்பகுதியை விவரிக்கையில்  குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து  இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்காத பெயர்களையும் விஷயங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்

பிள்ளை இல்லாதவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொள்வது அப்போதும் நடைமுறையிலிருந்திருப்பதை சரஸ்வதியும் பார்வதியுமாய் ஐதாளரிடம் அதுகுறித்து பேசுவதிலிருந்து தெரிகிறது. எதிர்பாரா விதமாக ஐதாளர் சுவீகாரத்திற்கு முனையாமல் சத்தியபாமையை இரண்டாம் திருமணமே செய்துகொள்வது அந்தப்பெண்களுடன் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

 இரண்டாவதாக ஒருத்தி தன் வாழ்வில் வரப்போகும் போதும் பார்வதி அவள் கன்னடபிராமணர்களில்   ’கோட’ அல்லது ’சிவள்ளி’ இவற்றில் எந்தப்பிரிவை சேர்ந்தவளென்பதில் கவலை கொள்வதிலிருந்து அப்போது சாதிவேற்றுமைகள் மட்டுமன்றி  குடும்பங்களுக்குள் நுண்ணிய சாதீய அடுக்கின் சிக்கல்களும்  இருந்திருக்கிறதென்பதை அறியலாம்.

திருமண ஊர்வலத்தில் ஒவ்வொருவர் கையிலும் இரண்டு பந்தங்களை கொடுத்து கூட்டம் அதிகமானதுபோல் காட்டுவது பாட்டியன்னம் என்னும் பாட்டிமை அன்று மணமகளுக்கு நடக்கும் சடங்கு  தாசிகள் பொன் பெற்றுக்கொண்டு சலாமிடுவது பெரும் அந்தஸ்தாக கருதப்படுவது  போன்ற விவரணைகளிலிருந்து அப்போதிய திருமணங்களின் போது   நடக்கும் பலவகையான முறைமைகள் வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.

 லச்சன் பிறந்த பிறகு அவனை பள்ளிக்கூடம் சேர்ப்பது குறித்தான பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவனை சேர்ப்பதென்பது இழிவு என்று பெரியவர்கள் யாவரும் ஒன்றே போல அபிப்பபிராயப்படுவதிலிருந்து தீண்டாமை 18 ஆம் நூற்றாண்டு முடியும் தருவாயிலும் மிகத்தீவிரமாக நிலவி வந்திருப்பதை உணரலாம்.

மெல்ல மெல்ல வட்டிக்கு பணம் கொடுக்கும் வழக்கம் வருவதை, ஆடம்பரத்துக்கு விருப்பப்படும் குடும்பங்கள் பெருகுவதையெல்லாம் சீனப்பன், சீனப்பய்யராக மாறுவதுபோன்ற நுட்பமான கதாபாத்திர மாற்றங்களின் மூலம் சொல்லத் துவங்குகிறார் கதாசிரியர்.

 காட்சிகள் மாறிக்கொண்டே வந்து லச்சன் தட்டுக்கெட்டு திசைமாறி தீய வழக்கங்களுக்கு அடிமையாகி, அவனால் அவன் மனைவியின் உடல்நிலையும் பாழாவதை பார்க்கிறோம், 500 ரூபாய் பணம் கொடுத்தால் மணியக்காரர் பதவி கிடைக்கும் என்னும் வரிகளில்  லஞ்சம் கொடுக்கும் சூழல் 19 ஆம் நூறாண்டில் மெல்ல துவங்கியிருப்பதை உணரலாம்

பீட்ஸா இந்தியக்குக்கிராமங்களிலும் புழக்த்திலிருக்கும் இக்காலகட்டத்தில் நாவலில் காப்பி என்னும் பானம் மெல்ல கலாச்சாரத்துக்குள் நுழைவதையும் பல ஆச்சாரமான குடும்பங்கள் அதை வீட்டுக்குள்ளே  அனுமதிக்காமலிருந்ததையும் வியப்புடன்  வாசிக்க முடிகின்றது.

காலங்கள் மாறி  வருகையில் லச்சனின் மனைவியான நாகவேணி சரஸ்வதியை, பார்வதியை போலல்லாமல் தன்னந்தனியே கணவனின்றியும் வாழ்த்துணிகையில் பெண்களின் மனோநிலையும் மாறிக்கொண்டு வருவதை நாம் அறியலாம்.

 சுதந்திரப்போரட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் ராமன் அப்போதைய சுதந்திர உணர்வெழுச்சி மிக்க இளைஞர்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்

எத்தனையோ க‌ஷ்டகாலங்கள் மாறி மாறி வந்தாலும் மீண்டும் மீண்டும் மூன்று தலைமுறைப்பெண்களும் அந்த ஓட்டு வீட்டுக்கே திரும்புகிறார்கள் அம்மண்ணே அவர்களை  பிணைக்கிறது வாழ்வுடன் ’’மீண்டும் மண்ணிற்கே’’ என்னும் கன்னட தலைப்பும் ’’மண்ணும் மனிதரும்’’ என்னும் தமிழாக்க தலைப்பும் மிகபொருத்தமாக கதையின் மூன்று தலைமுறை மாந்தர்களையும் நமக்கு காட்டித்தருகின்றது

வேளாண்மையும் தொற்றுநோயின் இறப்புக்களும் ஏழ்மையுமாக முதல் தலைமுறை ஆங்கிலக்கல்வியும் புதிய கலாச்சாரமும் கிடைக்கப்பெறும் இரண்டாம் தலைமுறை  பெருநகரங்களுக்கு கல்வியின் பெயரால் இடம்பெயரும் அங்கு வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் மூன்றாம் தலைமுறை என மாறிவரும் தலைமுறைகளின் மூலம் மாறி வந்திருக்கும் இந்திய சமூக வாழ்வினையும்   சொல்லும் இந்நாவல் இறுதியில்  ராமன் சரஸ்வதி என்னும் அவனின்  பாட்டியின் பெயருடன் துடைப்பமும் கையுமாக வீட்டுப்பொறுப்பை நிர்வகிக்க வல்லவள் என்னும் சித்திரத்தைக் கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்வதுடன் நிறைவடைகிறது.   

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் குழந்தைக்காக ஐதாளர் மறுதிருமணம் செய்துகொள்ளுவதும் பின்னர்  சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடும் மூன்றாம் தலைமுறைக்காரனான நவீன சிந்தனையுளவனான ராமனும் பிற காரணங்களை விட வீட்டுபொறுப்பில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக காட்டியிருப்பதும்  காலங்கள் எத்தனை மாறினாலும் பெண்களின் இடமென்று ஆண்கள் நிர்ணயம் செய்துவைத்திருப்பது சமையலறையும் படுக்கையறையும் தானென்பதையும் அன்றும் இன்றும் என்றும் இது ஆண்களின் உலகே என்பதை இந்நாவலும் காட்டும் இடமென்பதாகவும் கொள்ளலாம்

இந்நாவல் நமக்கு அக்காலத்திலிருந்த  சாதீய அடுக்குகள் தீண்டாமை தொற்று நோய்கள் பெண்களின் வாழ்வு முறை ஆண்களின் அதிகாரம் புதுக்கலாச்சாரங்கள் மெல்ல மெல்ல சமுகத்தில் நுழைவது என பலவற்றைச் சொல்கிறது.

சிவரம காரந்தின் பாட்டி தனது தள்ளாத வயதில் விருப்பு வெறுப்புகளின்றி இக்கதையை  அவருக்கு சொல்லியதால் கதையிலும் எந்த பாரபட்சமும் சார்பும் இன்றி கதை மாந்தர்கள்  அனைவரும் நடுநிலையுடன்  சித்தரிக்கபட்டிருக்கின்றனர்

மண்ணும் மழையும் பெண்களும் ஏழ்மையும் இசையும் இயற்கையுமாக அழகிய நாவல் இது. ராமனும்  அவன் தாயும் ஓர் இரவில் பொழியும் நிலவின் புலத்தில் நனைந்தபடி  கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஒருகாட்சி  சம்சாரம் ஒரு நரகமென்றாலும் அதிலும் ரசிக்கத்தக்க விஷயங்கள் சம்பவங்கள் நிகழ்வுகள் இருக்கும் என நமக்கு இக்கதை உணர்த்தும் ஒரு அழகுச்சாட்சி. அக்காட்சி  ஒரு கவிதையையைப்போல  கதையில் தீட்டப்பட்டிருக்கும்.

ஞானபீட விருது சாகித்ய அகாடமி விருது என பலவற்றைப் பெற்ற அறிஞரான சிவராம காரந்தின் கன்னட மொழிவளத்திற்கு சற்றும் குறையாமல் தமிழில் மிகசிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கும் திரு தி ப சித்தலிங்கையாவிற்கு வாசிக்கும் அனைவரின் நன்றிகளும் கட்டாயம்  உரித்தாகும்